சுற்றுச்சூழல் என்பது மனிதனுடைய அல்லது மனிதன் உள்ளிட்ட சமுதாயத்தின் வெளிப்புறத் தன்மைகளைப் பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதாவது நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் மற்றும் புழு பூச்சியினங்களின் இயக்கம், தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் சுற்றுச்சூழல். இத்தகைய சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க
PLASTIC FREE ENVIRONMENT – நெகிழியில்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதலை நம் அரோபிந்தோ பள்ளி முன்னெடுத்துச் செல்கிறது. வீட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களை மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு வரச் செய்து அதை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நம் பள்ளி மாணவர்கள் மூலம் 25000க்கும் மேற்பட்ட காகிதப் பைகள் தயாரித்துத் தாராபுரம் பகுதியிலுள்ள கடைகளில் கொடுத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் மாணவர்கள் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் குடுவை, உணவு கொண்டு வரும் உணவுப் பெட்டி, புத்தக மேலுறை, ஏடுகளின் மேலுறை ஆகியவற்றில் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருக்கிறோம். அதோடு சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொண்டு அமராவதி ஆற்றைச் சுத்தம் செய்தல், கோவில்களைச் சுத்தம் செய்தல், மரக்கன்றுகளை நடுதல், விதைப்பந்துகளை விதைத்தல் போன்ற செயல்களை, நம் அரோபிந்தோ பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து தொடர்ந்து செய்து வருகிறோம். இதுபோல் நம் சுற்றுச்சூழலை நல்ல முறையில் பேணிக் காத்து அடுத்த, தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.